Tuesday, September 26, 2006

கருணாநிதி பதில்

திமுகவின் சதியால் தான் முரசு சின்னம் பறிபோனது என்ற தேமுதிகவின் குற்றச்சாட்டு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியது:

இந்திய தேசிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசிய கட்சிகள், நான்கு மாநில கட்சிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தேர்தல் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அந்தச் சின்னங்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான 35 சின்னங்கள் கொண்ட பட்டியலில் முரசு சின்னம் இடம்பெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அதே நேரத்தில் இன்னமும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சியாக தே.மு.தி.க. இருப்பதால் அந்தக் கட்சி கேட்கும் சின்னத்திற்கு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இதில் தி.மு.க.விற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தி.மு.க.வின் மீது தேவையில்லாமல் திட்டமிட்டு கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

விஜயகாந்த் அறிக்கை

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அதே நேரத்தில் அங்கீகாரம் பெறாத கட்சியாக தேமுதிக இருப்பதால் அந்த கட்சி கேட்கும் முரசு சின்னம் இன்னும் தேர்தல் ஆணையத்தால் அக்கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.

அங்கீகாரம் பெறாத கட்சி என்பதால் அதன் வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை வேட்பாளர்களுக்கான பட்டியலில் முரசு சின்னம் இல்லாததால் அக்கட்சி வேட்பாளர்கள் இந்தச்சின்னத்தை தேர்வு செய்ய முடியாது.

எனவே சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் முரசு சின்னத்தைப் பெற்ற தேமுதிக இம்முறை வேறு சின்னங்களில் தான் போட்டியிட வேண்டியதாகிறது.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சதியால்தான் தேர்தல் ஆணையம் முரசு சின்னத்தை சுயேட்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Monday, September 25, 2006

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

பலரது எதிர்பார்ப்புகள், மற்றும் புலனாய்வுப் பத்திரிகைகளின் முன்னறிவிப்புகளுக்கு மாறாக மதுரை மத்திய தொகுதிக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகள் அமைந்துள்ளன.

அதிமுக சார்பில் அக்கட்சியின் நிரந்தர வாக்கு வங்கியான முக்குலத்தோரான மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவும், திமுக சார்பில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் துணைமேயர் கௌஸ்பாட்சா, தேமுதிக சார்பில் தொகுதியின் பெரும்பான்மை இனமான யாதவ மகாசபையின் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் நிறுத்தப் பட்டுள்ளனர். அனைத்து தேர்வுகளும் சாதி அடிப்படையிலேயே அமைந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இடைத்தேர்தல் அறிவிப்பு

இந்தியத் தேர்தல் ஆணையம் மதுரை மத்திய தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பழனிவேல்ராஜன் காலமானதை அடுத்து அங்கே இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. செப்டம்பர் 16 முதல் 23 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 25 வேட்புமனு பரிசீலனை. செப்டம்பர் 27 வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம்.

அக்டோபர் 11 அன்று இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 17 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல் நடைமுறைகள்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இம்முறை 1,17,302 கிராம மற்றும் 13,660 நகர்ப்புற இடங்களுமாக மொத்தம் 1,30,962 இடங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மொத்தம் 80,458 வாக்குச்சாவடிகளில், 55,484 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களிலும் 24,974 நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. 430 கிராமப்புற மற்றும் 436 நகர்ப்புற மையங்களுடன் மொத்தம் 866 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப் படுகின்றன. 2,30,45,90 ஆண் வாக்காளர்கள் மற்றும் 2,33,73,805 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 4,64,19,395 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளனர்.சுமார் 2.42 லட்சம் வாக்குப் பெட்டிகள் தயார்நிலையிலுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப் படும். வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் அச்சிடப்படாது எனத்தெரிகிறது.

ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்திலும், ஊராட்சித்தலைவருக்கு பழுப்பு நிறத்திலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கானது பச்சை நிறத்திலும் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கு மஞ்சள் நிறத்திலும் அச்சிடப்படுகிறது.

நகர பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினருக்கு வெள்ளைநிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும்.

இம்முறை மாநகராட்சி மேயர்களுக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப் பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சி உறுப்பினர்களே மேயரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் அறிவித்தார். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அக்டோபர் 13 மற்றும் 15 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டு வாக்குகள் அக்டோபர் 18 அன்று எண்ணப் படும்.

செப்டம்பர் 20 முதல் 27 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு செப்டம்பர் 28 அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.

சென்னை சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளுக்கும் 45 நகராட்சிகள், 23 கீழ்நிலை நகராட்சிகள், 281 நகர பஞ்சாயத்துகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் அக்டோபர் 13 அன்று தேர்தல் நடைபெறும்.

மதுரை, திருச்சி மாநகராட்சிகளுக்கும் 57 நகராட்சிகள், 27 கீழ்நிலை நகராட்சிகள், 280 நகர பஞ்சாயத்துகள், 190 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் அக்டோபர் 15 அன்று தேர்தல் நடைபெறும்.

மாநகராட்சி உறுப்பினர்கள், நகராட்சி, கீழ்நிலை நகராட்சிகள், நகர பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் அரசியல் கட்சி சார்ந்தும் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் அரசியல் கட்சி சாராமலும் நடத்தப்படும்.

Sunday, September 24, 2006

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் பற்றிய தகவல்களுக்காக இந்தப் பதிவு

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com