Tuesday, October 31, 2006

கலகலத்த கூட்டணி...!

உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டதில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பலவற்றை அக்கட்சிகள் இழந்துள்ளன. இது குறித்து அக்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதில் ஒருபடி மேலே சென்று பாமக தலைவர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி 'திமுக பச்சை துரோகம்' என்று வர்ணித்தார். தாங்கள் இனி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறியிருப்பதன் மூலம் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால் இனி இப்போதைய உள்ளாட்சித் தலைவர்கள் பலரின் பதவி தொடருமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. கூட்டணிக்காக அந்தந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல், சில உறுப்பினரே தேர்வான இடங்களில் கூட மாற்றுக் கட்சியினர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இது எதிரொலிக்கக் கூடும்.

தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணிகள் கலகலக்கத் தொடங்கி விட்டன. மக்களாலேயே உள்ளாட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதை மாற்றியதன் விளைவைத் தான் இப்போது பார்க்கிறோம். கட்சி மாறல், வேட்பாளர் கடத்தல், விலைபேசல் பேரங்கள் என தலைவர்கள் தேர்தலில் நடைபெற்ற அலங்கோலங்களும், அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டணி கலகலப்புகளும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

அடுத்த தேர்தலுக்குள் இன்னும் பல கட்சிமாறல்களையும் காட்சிமாற்றங்களையும் மக்கள் சந்திக்க நேரிடும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

மக்களாட்சியில் மக்களை பாவைகளாக்கி அரசியல் கட்சிகள் ஆடும் அரசியல்கூத்து!

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com