தேர்தல்வன்முறை வழக்கு விசாரணை
சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. வழக்கு பதில் தருமாறு தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, அக். 14-
சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுபற்றி பதில் தருமாறு மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. வழக்கு
நேற்று காலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை, 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் சந்தித்து சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறினார்கள்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று ஐகோர்ட்டுக்கு விடுமுறை ஆகும். இருந்தபோதிலும் இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.
நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது. ஐகோர்ட்டு பதிவாளர் மற்றும் அதிகாரிகள் காலை 12 மணிக்கே கோர்ட்டுக்கு வந்துவிட்டனர். மதியம் அ.தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 மணிக்கு தான் அ.தி.மு.க சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மீனவ அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அ.தி.மு.க. கூறியிருப்பதாவது:-
திட்டமிட்டு தாக்குதல்
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக அளவில் வாக்குகளை பெற்று சென்னையில் வெற்றி பெற்றது. இதனால் மாநகராட்சி தேர்தலில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ளாமல் தி.மு.க.வினர் திட்டமிட்டு தேர்தலின்போது அராஜகத்தில் ஈடுபட்டனர். 155 வார்டுகளிலும் புகுந்து பூத் ஏஜெண்டுகளை தாக்கி ஓட்டு சாவடியை கைப்பற்றி விட்டனர். போலீசார் துணையுடன் வாக்குசாவடிக்குள் நுழைந்தனர்.
ஓட்டுபெட்டியை கைப்பற்றி
ஓட்டுப்பெட்டியையும், வாக்கு சீட்டுகளையும் கைப்பற்றி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுள்ளனர். இதுபற்றி கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர் பதில் தெரிவிக்கும் நிலையில் இல்லை.
வாக்களிக்க வந்த அ.தி.மு.க.வினர் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
உயிருக்கு பயந்து ஓட்டம்
ஒரு வாக்குசாவடியை கைப்பற்றி அதில் உள்ள ஓட்டுப்பெட்டியை தூக்கி கொண்டு வந்து மரத்தடியில் வைத்து கள்ள ஓட்டு போடப்பட்டது. இதை அ.தி.மு.க.வினர் கண்டு அவர்களிடம் இருந்த வாக்குசீட்டுகள் மற்றும் முத்திரைகளையும் கைப்பற்றி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வந்துவிட்டனர்.
பல்வேறு ஓட்டுசாவடிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 27 வேட்பாளர்கள் வக்கீல்களாகும். இப்படிப்பட்ட வேட்பாளர்களே அடிவாங்கி உயிருக்கு பயந்து ஓடிவந்துவிட்டனர். இதிலிருந்து சென்னை தேர்தலில் ரவுடிகள் அராஜகம் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பல வாக்குசாவடிகள் மதியம் 12 மணிக்கே ஓட்டுப்பதிவு முடிந்ததாக கூறி ஓட்டுசாவடியை இழுத்து மூடிவிட்டனர்.
செல்லாது என்று அறிவிக்கவேண்டும்
155 வார்டுகளிலும் ரவுடிகள் மூலம் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஏஜெண்டுகள் எல்லோரும் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு நேற்று மாலை 5.15 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. எம்.பி.யும், வக்கீலுமான என்.ஜோதி ஆஜராகி வாதாடினார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-
வக்கீல் என்.ஜோதி:- வாக்குசாவடியில் தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாக்குசீட்டுகளையும், முத்திரைகளையும் இக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம். வாக்குசீட்டுகள் அனைத்திலும் உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்ட நிலையில் உள்ளது. எனவே இந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணுவதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு வக்கீல் என்.ஜோதி வற்புறுத்தி வாதாடினார்.
ஐகோர்ட்டு பாதுகாப்பில்
115, 145, 147 வார்டுகளில் இந்த வாக்குசீட்டுகள் தி.மு.க.வினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வக்கீல் என்.ஜோதி தெரிவித்தார்.
இந்த வாக்குச்சீட்டுகளையும், 3 முத்திரைகளையும் கோர்ட்டு பாதுகாப்பில் வைக்கும்படி பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை கோர்ட்டில் வந்து ஆஜரானார். தான் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜராவதாக தெரிவித்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தார். வக்கீல் ஜோதி குறுக்கிட்டு ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மாநில தேர்தல் கமிஷன், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், தி.மு.க. போன்ற பிரதிவாதிகளிடம் பதில் கேட்டபிறகே எந்த உத்தரவுமë பிறப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பிறகு மனுமீதான விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
மனுதாரர் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்த வாக்குச்சீட்டுகளையும், முத்திரைகளையும் அட்வகேட் ஜெனரல் பார்வையிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தே.மு.தி.க.
தே.மு.தி.க. கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ராமுவசந்தன் இந்த வழக்கில் தன்னையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
அ.தி.மு.க. போலவே மனுவில் குற்றச்சாட்டுகளை கூறி சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கமிஷனர் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை நோட்டீசை பெற்றுக்கொண்டார். தி.மு.க. சார்பில் வக்கீல் ஜே.ரவீந்திரனும், போலீஸ் சார்பில் வக்கீல் ஸ்ரீகாந்தும் நோட்டீசை பெற்றுக்கொண்டனர். இதன்பிறகு வழக்கு விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குள் தேர்தல் கமிஷனர், டி.ஜி.பி., தி.மு.க. ஆகியவை பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையின்போது காயமடைந்த பலர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
கூச்சல்-குழப்பம்
இந்த வழக்கையொட்டி பிற்பகலில் இருந்தே நூற்றுக்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலர் காயத்துடன் தலை, கை போன்றவற்றில் கட்டுப்போட்ட நிலையில் வந்திருந்தனர். கோர்ட்டுக்குள்ளும், வெளியிலும் கூடியிருந்தனர். நீதிபதிகள் கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பாக மின் இணைப்பில் அடிக்கடி தடை ஏற்பட்டது.
கோர்ட்டுக்குள் விளக்குகள் அணைந்தபோது சினிமா கொட்டகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதுபோல கோர்ட்டுக்குள் இருந்த அ.தி.மு.க.வினர் ஆரவாரம் செய்தனர். வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்ததும் கோர்ட்டு வளாகத்திற்குள் கூடி போலீசாருக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக கோஷமிட்டனர்.
செய்தி : தினத்தந்தி
No comments:
Post a Comment