வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தேர்தல் வன்முறை வழக்கு காரணமாக சென்னை மாநகராட்சி தவிர பிற உள்ளாட்சி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்ததாக வழக்கு எதிரொலி
சென்னையில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
தமிழகத்தின் மற்ற இடங்களின் முடிவு இன்று தெரியும்
மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு எதிரொலியாக, சென்னையில் இன்று மாலை வரை ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் மற்ற இடங்களில், திட்ட மிட்டபடி ஓட்டு எண்ணிக்கை தொடங்கி இன்று முடிவுகள் வெளியாகும்.
சென்னை, அக்.18-
தமிழ்நாட்டில், கடந்த 13 மற்றும் 15-ந்தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.
மாநகராட்சி, நகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அ.தி.மு.க. வழக்கு
கடந்த 13-ந்தேதி நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்து, கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், இந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று, மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில், நேற்று 2-வது நாளாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையர் சார்பில் தமிழக அரசின் தலைமை வக்கீல் ஆர்.விடுதலை ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின்போது, மாநகராட்சி தேர்தலில் வன்முறைகள் நடந்தபோது, தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை கடைப்பிடித்தனரா? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினார்கள்.
ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று முடிவுக்கு வர தேர்தல் ஆணையத்துக்கு 5 நிமிடங்கள் அவகாசம் அளித்த நீதிபதிகள், அப்படி நீங்களே முடிவு எடுக்காவிட்டால் விரும்பத்தகாத இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் கலந்து பேசிய தலைமை வக்கீல் விடுதலை, விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று கோர்ட்டு நேரம் முடியும் வரை சென்னை மாநகராட்சி பகுதி ஓட்டுகளை எண்ணமாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அவர் உத்தரவாதம் அளித்தார்.
பிற்பகல் 2.30 மணிக்கு.....
அதைத்தொடர்ந்து, "கோர்ட்டில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து எந்தெந்த வார்டுகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என்பதை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சென்னை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை, இன்று மாலை வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
மற்ற இடங்களில்
சென்னை மாநகராட்சி தவிர, தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முற்பகல் முதல் முடிவுகள் வெளிவரத்தொடங்கும்.
செய்தி: தினத்தந்தி
No comments:
Post a Comment