தேர்தல் வன்முறை-2
விறுவிறுப்பான வாக்குப்பதிவு! சென்னை மாநகராட்சி
சென்னை, அக். 13-
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். எல்லா பூத்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, சிற்றூராட்சிகள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 479 உள்ளாட்சி அமைப்புகளில் 67 ஆயிரத்து 760 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க எல்லா இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக போலீசாருடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் காலையில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகின்றனர். பல இடங்களில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
சில இடங்களில், ஓட்டுச்சீட்டுகளில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் மாறி இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அந்த இடங்களில் மாற்று ஏற்பாடுகளுடன் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. கள்ள ஓட்டு போடுவதாக கூறி பல இடங்களில் அரசியல் கட்சியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. இதில், 1,326 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநகர் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 295 வாக்குச்சாவடிகளில் 16 ஆயிரத்து 475 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். எல்லா வார்டுகளிலும் காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் 112-வது வார்டில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அவருடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் வந்து ஓட்டு போட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வந்து 113-வது வார்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
சென்னை பெசன்ட் நகர் அறிஞர் அண்ணா பள்ளியில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து 50 ஓட்டு சீட்டுக்களை கைப்பற்றிச் சென்றது. மீன்பிடி துறைமுகம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி ம.தி.மு.க.வினர் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை கொருவப்பா செட்டி தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கள்ள ஓட்டு போடுவதாக கிடைத்த தகவலின்பேரில் ம.தி.மு.க. வேட்பாளர் சேகர் தலைமையில் சிலர் அங்கு விரைந்தனர். வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் சென்று, Ôஇங்கு கள்ள ஓட்டு போடப்படுகிறதாÕ என சேகர் விசாரித்தார். இதைக் கேட்டு கோபமடைந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த அடையாள அட்டையை காட்டி ‘எங்களுக்கு இதே பகுதிதான், நாங்கள் கள்ள ஓட்டு போட வரவில்லைÕ என கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் சேகர் கீழே விழுந்தார். காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அசோக் நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்குள் அ.தி.மு.க.வினர் புகுந்து 3 ஓட்டுப் பெட்டிகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் ஓட்டுப் பதிவு பாதிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மற்றும் ஓட்டேரியில் ஆயிரத்து 500 அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். டிரஸ்ட்புரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நக்கீரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர். நகர், காமராஜர் ரோடு - அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒரு கும்பல் புகுந்து பொதுமக்களை அடித்து விரட்டி ஓட்டு போடவிடாமல் தடுத்தது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரையருவர் கல் வீசி தாக்கிக் கொண்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். கல் வீச்சில் ஒரு போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை தீவுத் திடல் அருகே கேந்திர வித்யாலயா பள்ளியில் அ.தி.மு.க.வினர் புகுந்து 3 ஓட்டுப் பெட்டிகளை அடித்து உடைத்தனர். அங்கு ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. திருவான்மியூர் ஜூனியர் இன்ஜினியர் அலுவலகம் அருகே துரைப்பாக்கம் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராணியின் கணவர் குணசேகர், தனது ஆதரவாளர்களுடன் ஒரு டாடா சுமோ, 2 குவாலிஸ் கார்களில் கள்ள ஓட்டு போட வந்தார். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கார்களையும் கைப்பற்றினர்.
தேர்தல் கலாட்டா
சென்னை, அக். 13-
?சென்னையின் 132வது வார்டு அதிமுக வேட்பாளர் கடும்பாடியின் ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வில்லியம்ஸ் ஆதரவாளர்களுக்கும் இன்று காலை 8 மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இந்நிலையில், உதயம் தியேட்டர் எதிரே உள்ள அண்ணா சமூகநல கூட வாக்குச் சாவடிக்கு 9.15க்கு ஆதரவாளர்களுடன் கடும்பாடி வந்தார். கள்ள ஓட்டு போட அவர்கள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கடும்பாடியும் 20 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
?131வது வார்டில் அதிமுக - பாமக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தினர்.
?14வது வார்டின் மூன்று பூத்களிலும் 500க்கு மேல் கள்ள ஓட்டு போட்டதாக எண்ணூர் ஹைரோடு சூரியநாராயணன் தெரு அருகில் மதிமுக வேட்பாளர் ராஜவள்ளி தலைமையில் ஆதரவாளர்கள் காலை 8.15க்கு மறியல் செய்தனர். ஆனால், அப்போது வரை மொத்த வாக்குகளே 194தான் பதிவாகியிருந்தன. ஒன்றரை மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் முடியும் நேரத்தில், மொத்தம் 249 ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
? 109வது வார்டு தேனாம்பேட்டையின் மாநகராட்சி மாதிரி பள்ளியில் 1680, 81 ஆகிய இரண்டு பூத்களில் தேமுதிக வேட்பாளர் தங்கமணியின் மகன் ரஞ்சித் அத்துமீறி புகுந்து, வாக்குச் சீட்டுகளை பறித்துச் சென்றார். இதனால், 9 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக, வேறு சீட்டுகள் கொண்டு வரப்பட்டு, 9 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது. வாக்குச்சாவடி அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்தை போலீசார் தேடிவருகின்றனர்.
அதிமுக&பாமக மோதல் வாக்குப்பதிவு நிறுத்தம்
80-வது வார்டில் பரபரப்பு
சென்னை, அக். 13-
சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட 80வது வார்டில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது, அதிமுகவினர் - பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குப் பெட்டிகள், சாவடியின் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 700 பேர் ஓட்டு போட்ட நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 80வது வார்டில் அதிமுக பெண் வேட்பாளர் நாகமணி, பாமக வேட்பாளர் ஏழுமலை மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தையில் சீட் கிடைக்காததால், கணேசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
பல்லவன் சாலை கேந்திர வித்யாலயா பள்ளியின் 8 பூத்களில் இந்த வார்டுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்தில் 700 ஓட்டுகள் பதிவான நிலையில், வாக்குச் சாவடிக்குள் கணேசன் நுழைந்தார். Ôஅதிகளவில் கள்ள ஓட்டு போடப்படுகிறது. தேர்தலை நிறுத்த வேண்டும்Õ என்று கூறி ரகளை செய்தார். அப்போது, அதிமுக வேட்பாளர் நாகமணியின் ஆதரவாளர்களும் உள்ளே புகுந்து கோஷம் எழுப்பினர். மோதலில் ஈடுபட்டனர்.
பள்ளியின் 3வது பூத்தில் நுழைந்த அதிமுகவினர் வாக்குப் பெட்டிகளையும் ஜன்னல், கதவுகளையும் உடைத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், மற்ற பூத்களிலும் கலவரம் ஏற்பட்டது. வாக்குச்சீட்டு, பெட்டி, மை உட்பட எல்லாவற்றையும் அதிமுகவினர் சூறையாடிச் சென்றதையடுத்து, அரை மணி நேரத்தில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
இதனால், பாமகவினருக்கும் அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக்கொண்டனர். இதில் நாகமணியின் மகன் தனசேகர், கணவர் ஆறுமுகம் ஆகியோருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது.
அதிமுக மறியல்: பஸ்கள் உடைப்பு சென்னையில் 200 பேர் கைது
சென்னை, அக். 13-
சென்னையில் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி அ.தி.மு.க.வினர் தகராறு செய்தனர். ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தி.நகர், சூளைமேடு, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய இடங்களில் மறியல் நடந்தது. தி.நகர் பஸ் நிலையம் அருகே தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கலைராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர போலீசார் மீது கல் வீசி தாக்கினார்கள். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவான்மியூரில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் கள்ள ஓட்டு போட முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட் அருகே புதுப்பேட்டை சாலையில் 106-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பாலகங்கா, தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். பாலகங்கா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாநகர போக்குவரத்து பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தலைமை நீதிபதியிடம் அதிமுக முறையீடு
சென்னை, அக். 13-
சென்னையில் பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டு வருவதாகவும், உடனடியாக தேர்தலை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் அதிமுக முறையிட்டுள்ளது.
அதிமுக எம்.பி. ஜோதி, இன்று காலை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வீட்டுக்கு சென்று அவரிடம் வாய்மொழியாக ஒரு புகார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. பல இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மாநில தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
இது குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும்Õ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, மதியம் 2 மணிக்கு இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்தார்.
தோல்விக்கு ஜெயலலிதா சொல்லும் காரணம் கருணாநிதி பதிலடி
சென்னை, அக். 13-
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளிக்கு காலை 9 மணிக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மனைவி ப்ரியாவுடன் வந்து ஓட்டு போட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, மனைவி தயாளு அம்மாள், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தனர்.
வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் கூறியதும்:
திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பிரகாசமாக உள்ளது.
கள்ள ஓட்டு போட திமுக திட்டமிட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தோல்விக்கு அவர் சொல்லும் காரணம்தான் இது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
செய்தி: தமிழ்முரசு
No comments:
Post a Comment