Tuesday, October 31, 2006

கலகலத்த கூட்டணி...!

உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டதில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பலவற்றை அக்கட்சிகள் இழந்துள்ளன. இது குறித்து அக்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதில் ஒருபடி மேலே சென்று பாமக தலைவர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி 'திமுக பச்சை துரோகம்' என்று வர்ணித்தார். தாங்கள் இனி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறியிருப்பதன் மூலம் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால் இனி இப்போதைய உள்ளாட்சித் தலைவர்கள் பலரின் பதவி தொடருமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. கூட்டணிக்காக அந்தந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல், சில உறுப்பினரே தேர்வான இடங்களில் கூட மாற்றுக் கட்சியினர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இது எதிரொலிக்கக் கூடும்.

தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணிகள் கலகலக்கத் தொடங்கி விட்டன. மக்களாலேயே உள்ளாட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதை மாற்றியதன் விளைவைத் தான் இப்போது பார்க்கிறோம். கட்சி மாறல், வேட்பாளர் கடத்தல், விலைபேசல் பேரங்கள் என தலைவர்கள் தேர்தலில் நடைபெற்ற அலங்கோலங்களும், அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டணி கலகலப்புகளும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

அடுத்த தேர்தலுக்குள் இன்னும் பல கட்சிமாறல்களையும் காட்சிமாற்றங்களையும் மக்கள் சந்திக்க நேரிடும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

மக்களாட்சியில் மக்களை பாவைகளாக்கி அரசியல் கட்சிகள் ஆடும் அரசியல்கூத்து!

Thursday, September 28, 2006

விடுதலைச் சிறுத்தைகள் விலகல்

அ.தி.மு.க. அணியில் இருந்து திடீர் விலகல்:
திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்
கருணாநிதியுடன் சந்திப்பு


சென்னை, செப்.28-

விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் இருந்து விலகினார். நேற்று அவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து, தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்.

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இணைந்து போட்டியிட்டது.

உள்ளாட்சி தேர்தல்

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருந்தது. அந்த கட்சிக்கு 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த ஒதுக்கீடு போதாது என்று, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில், அந்த கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோம் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, 15-க்கும் அதிகமான நகர, ஒன்றிய பகுதிகளில், ஒதுக்கப்பட்டதை விட கூடுதல் இடங்களில் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வாபஸ் பெற மறுப்பு

அந்த இடங்களில் விடுதலைச்சிறுத்தைகளின் வேட்பாளர்களை வாபஸ் பெறும்படி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வற்புறுத்தினார்கள். ஆனால், அதற்கு விடுதலை சிறுத்தைகள் மறுத்துவிட்டனர். இதன்காரணமாக கூட்டணியில் `நெருடல்' ஏற்பட்டது.

இதற்கிடையில், நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், கூட்டணியில் சில சிக்கல்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டார். அதுபற்றி பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும், அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும், பேட்டியின்போது திருமாவளவன் அறிவித்து இருந்தார்.

கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், நேற்று இரவு 7.05 மணிக்கு திருமாவளவன் தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்துக்கு `திடீர்' என்று வந்தார். அங்கு, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை அவர் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். பிறகு அவர்கள் இருவரும் பேச்சு நடத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ரவிக்குமாரும், இந்த சந்திப்பின்போது திருமாவளவனுடன் இருந்தார்.

திருமாவளவன் பேட்டி

ஏறத்தாழ 45 நிமிட நேர சந்திப்புக்குப்பின் வெளியே வந்த திருமாவளவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அவமதிப்பு

"தேர்தல் அரசியல் களம் எது என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. காலத்தின் கட்டளையை ஏற்று இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்தித்தபோதும், உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, கடுமையான அவமதிப்பு ஏற்பட்டது. உழைப்பை பகிர்ந்து கொள்வது போல் வெற்றியையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். அ.தி.மு.க.வினர் உழைப்பை சுரண்டுவதைத்தான் நோக்கமாக கொண்டு இருந்தனர். இதை பேச்சுவார்த்தையின்போது உணர முடிந்தது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வினர் எங்களுக்கு குறைவான இடங்களையே கொடுத்தனர். வெற்றிவாய்ப்பு இல்லாத இடங்களை எங்கள் தலையில் கட்ட முயன்றனர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சந்திக்க முடியவில்லை

எங்களை நட்டாற்றில் விடுவதுபோல் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளினார்கள். ஒன்று, இரண்டு மாவட்டங்களில் இந்த நிலை ஏற்பட்டது. நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த இடங்களில் அவர்களும் (அ.தி.மு.க) மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வந்தன. கூட்டணி கட்சி என்ற முறையில் அ.தி.மு.க. தலைமையை சந்திக்க முடியவில்லை.

நான் சந்திக்க விரும்புவதாக, அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் கூட அவர்கள் தலைமையிடம் தெரிவிக்கவில்லை. அதன்பின் அவர்கள் தொடர்ந்து பேச விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன். விடுதலைச்சிறுத்தைகளின் நோக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சுயமரியாதைக்காகவும் களப்பணி ஆற்றுவதுதான். சகோதரத்துவம், சமத்துவமும்தான் எங்கள் களப்பணி ஆகும்.

தி.மு.க. வெற்றிக்கு...

சுயமரியாதையை இழந்து, அவமரியாதையை தாங்கிக்கொண்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற முடியாது. முதல்-அமைச்சர் கருணாநிதி, எங்களுக்கு உரிய மதிப்பு அளித்து, கூட்டணியில் சேர்த்து இருக்கிறார்.

தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றிக்கு முழுமூச்சுடன் பாடுபடுவோம். கடந்த கால அனுபவங்களை மறந்து, அன்புடன் அரவணைத்து எங்களை வரவேற்ற முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.''

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இடப்பங்கீடு எவ்வளவு?

"தி.மு.க. அணியில் உங்கள் கட்சிக்கு இடப்பங்கீடு எவ்வளவு?'' என்று கேட்டதற்கு, "எங்களை அரவணைத்து உரிய மதிப்பு அளித்து, இடப்பங்கீடும் அளிப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

"முன்பு தி.மு.க. அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாங்கள், அந்த அணியை விட்டு விலகும்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள். இப்போது அ.தி.மு.க. அணியில் வெற்றி பெற்ற உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்வார்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அதுபற்றி நாளை (இன்று) பதில் அளிக்கிறேன், கட்சி அலுவலகத்துக்கு வாருங்கள்''என்று நிருபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தி.மு.க. அணியில்...

கருணாநிதியுடன் நடந்த சந்திப்புக்கு முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அணியில் சேருவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

படம்,செய்தி: தினத்தந்தி

திருமாவளவன் அணிமாற்றம்

*

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திடீரென அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிமுக கூட்டணி ஒதுக்கிய இடங்கள் தொடர்பாக சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் அம்மாவுடன் ஒத்துழைப்பு தொடரும் என்று அறிவித்துக் கொண்டிருந்த திருமாவளவன் வேட்புமனு தாக்கல் நேரம் முடிந்த பிறகு அணிமாறி அம்மாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வைகோ திமுகவுக்குச் செய்ததை இப்போது திருமா அதிமுகவுக்குச் செய்திருக்கிறார். ஆனால் இது குறித்து எந்த சூசகமும் இல்லாமல் காத்து கடைசி நிமிடத்தில் அணிதாவி திருமா தானும் அரசியல் தந்திரி என நிரூபித்திருக்கிறார்.

திமுக அணியில் இம்முறை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? அம்மா தந்த நான்கு சதவீதம் கூட திருமாவிற்கேதான். அங்கே இனி அதிமுக அல்லது அதன் கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அந்த இடங்களில் திமுக அணி வேட்பாளர்கள் வாபஸ் வாங்குவார்களா? விடுதலைச்சிறுத்தைகள் வேட்பு மனுதாக்கல் செய்திருக்கும் மற்ற தொகுதிகளிலும் திமுக அணி வேட்பாளர்கள் விட்டுக்கொடுக்க வாய்ப்பு உண்டா? பொறுத்திருந்து பார்போம்.

Wednesday, September 27, 2006

அணிகளும் இடங்களும்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீடுகள்

அதிமுக கூட்டணியில் மதிமுக 17.5 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் 4 சதவீதம் இடங்களில் போட்டியிடுகிறது. சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

அதிமுக-183, மதிமுக-32, விடுதலைச்சிறுத்தைகள்-10, இந்தியதேசியலீக்-2, ஐஎன்டியூசி-2

அகில இந்திய பார்வர்டு பிளாக்-1, மதச்சார்பற்ற ஜனதா தளம்-1,தமிழ் மாநில முஸ்லிம் லீக்-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம்-1,

திமுக கூட்டணிக்கான ஒதுக்கீடுகள் விவரம்:

திமுக 50 சதவீதம் காங்கிரஸ் கட்சி 25 சதவீதம், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 25 சதவீதம் இடங்களில் போட்டியிடுகின்றன.

மாநகராட்சி மன்ற மேயர் பதவி மொத்த இடங்கள் 6. தி.மு.க.-4, காங்கிரஸ்-2.

முதல் நிலை நகராட்சித் தலைவர்கள் மொத்த இடங்கள் 102. அதில் தி.மு.க. போட்டியிடும் இடங்கள்-52, காங்கிரஸ்-25, பாட்டாளி மக்கள் கட்சி-12, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-5.

மூன்றாவது நிலை நகராட்சித் தலைவர்கள் மொத்த இடங்கள்-50. அதில் தி.மு.க. போட்டியிடும் இடங்கள்-23, காங்கிரஸ் கட்சி-13, பாட்டாளி மக்கள் கட்சி-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-4, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-4.

பேரூராட்சித் தலைவர்கள் மொத்த இடங்கள் 561. அதில் தி.மு.க. போட்டியிடும் இடங்கள்-284, காங்கிரஸ் கட்சி-134 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி-70 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 45 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி 28 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மொத்த இடங்கள்-385. அதில் தி.மு.க. போட்டியிடுகின்ற இடங்கள் 185, காங்கிரஸ்-95, பாட்டாளி மக்கள் கட்சி-60, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-25, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-20.

மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மொத்த இடங்கள்-29. அதில் தி.மு.க. போட்டியிடுகின்ற இடங்கள்-12, காங்கிரஸ்-7, பாட்டாளி மக்கள் கட்சி-5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-3, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-2.

தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு), எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, September 26, 2006

பார்வைகள் பலவிதம்-1

தினத்தந்தி

சென்னை, செப்.26- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

பேச்சு வார்த்தை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 13 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. நாளை (புதன்கிழமை) மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடையே கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று 5-வது நாளாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு

காலை 10.15 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் குழுவினர் அறிவாலயம் வந்தனர். அங்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க .குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்து வெளியில் வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறும் போது, "பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது. தொகுதி பங்கீடு முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. எத்தனை தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சி தலைவரான முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பார்'' என்று கூறினார்.

புரட்சி பாரதம்

இதன் பிறகு புரட்சி பாரதம் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்பட்டது.

இது குறித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் எங்கள் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நாங்கள் கேட்ட தொகுதிகளை கூட்டணி தலைவர் கருணாநிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்'' என்று கூறினார்.

பா.ம.க

இதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏ.கே.மூர்த்தி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் அறிவாலயத்துக்கு பகல் 12.15 மணிக்கு வந்தனர். அவர்கள் தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்த வெளியில் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இதில் முடிவு ஏற்பட்டு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். தோழமை கட்சிகளுக்கு எங்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களில் போட்டியிடுவது பற்றி பேசப்பட்டது. தலைவர்கள் பதவி பற்றி மட்டும் பேசி முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பதவி பற்றி எல்லாம் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

காங்கிரஸ்

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் 12.30 மணி அளவில் அறிவாலயம் வந்தனர். காங்கிரஸ் பேச்சு வார்த்தை தான் முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்தது.

கடந்த 4 நாட்களாக தி.மு.க. குழுவுடன் பேசிவிட்டு நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று அங்கு அகில இந்திய தலைமையிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் நேற்று காலை தான் சென்னை திரும்பியிருந்தனர்.

30 சதவீதம்

மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. குழுவினர் நேற்று பகல் 12.30 மணி முதல் 2.20 மணி வரை பேச்சு வார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தொகுதி பங்கீட்டில் 30 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.

ஆனால் தி.மு.க. தரப்பில் 26 சதவீதம் வரை இடங்கள் தான் தர முடியும் என்று கூறினார்கள். இதை காங்கிரசார் ஒத்துக்கொள்வில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பகல் 2.30 மணி அளவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழு மதிய சாப்பாட்டுக்காக புறப்பட்டு சென்று விட்டனர்.

இதனால் காங்கிரஸ் குழுவும் வெளியில் வந்து விட்டனர். அவர்கள் அறிவாலயத்துக்கு வெளியில் வந்து சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்களும் அங்கு இருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் நேற்று மாலை வரை உடன்பாடு எதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறும்போது, "பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது'' என்றார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது

மீண்டும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழுவுடன் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்தில் எம்.கிருஷ்ணசாமி, டி.சுதர்சனம் ஆகியோர் கையெழுத்து போட்டனர். பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். தொகுதி பங்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எத்தனை சதவீத தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சி தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பார்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு பற்றி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையது சத்தார், மாநில மகளிர் அணி செயலாளர் பாத்திமா முத்தாபர் ஆகியோர் கொண்ட குழு தி.மு.க குழுவுடன் நேற்று இரவு 8 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில பொது செயலாளர் சையது சத்தார் கூறும்போது, ``தொகுதி பங்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பதை கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார்'' என்றார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு நேற்று இரவு சுமுகமாக முடிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

25 சதவீத இடங்கள்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

திருச்சி, கோவை ஆகிய மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 2 மாநகராட்சிகளிலும் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

*

தினமணி

உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணியில் உடன்பாடு

சென்னை, செப். 26: உள்ளாட்சித் தேர்தலில் இடப் பகிர்வு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் இடையே உடன்பாடு கையெழுத்தானது.

இருப்பினும் யாருக்கு எத்தனை இடம் என்பதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி சில நாள்களில் அறிவிப்பார் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதோடு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த ஊர்கள் என்ற விவரம் தேர்தல் முடிந்து அக்டோபர் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதை கூட்டணிக் கட்சிகள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன என்றும் கூறப்படுகிறது.

அதாவது கவுன்சிலர்கள் தான் மேயர், தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் கவுன்சிலர் தேர்தல் முடிந்த பிறகு எந்தெந்த நகராட்சி எந்தெந்த கட்சிக்கு என்பது அறிவிக்கப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேயர் பதவி மற்றும்சேர்மன் பதவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் கவுன்சிலர் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக தொடரவேண்டும் என்பதற்காக மேயர் மற்றும் தலைவர் பதவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை அறிவிப்பது தள்ளிப்போடப்பட்டுள்ளதாகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை கணித்து அதன் அடிப்படையில் இடங்கள் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

*

தினகரன்

சென்னை, செப்.26: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிந்ததால், இரண்டு கூட்டணியிலும் இன்று வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளியாக உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 13, 15ம் தேதிகளில் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நாளையுடன் மனுத்தாக்கல் முடிகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பாக இறுதிக் கட்ட பேச்சு நேற்று நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையிலான குழு நேற்று காலை தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான குழுவுடன் பேச்சு நடத்தியது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. விவரங்களை கூட்டணி தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார்’’ என்று பாண்டியன் கூறினார்.

அதையடுத்து, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தி.மு.க. குழுவுடன் நேற்று ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். ‘‘வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு உறுப்பினர்களுக்கான பதவி இடங்கள் பற்றி மாவட்ட அளவில் பேச்சு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று நிருபர்களிடம் மணி தெரிவித்தார்.

அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டோம். எவ்வளவு தொகுதிகள் என்பதை முதல்வர் அறிவிப்பார்’’ என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உடன்பாடு நேற்று முன்தினமே ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. 17.5 சதவீத இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் 4 சதவீத இடங்களிலும் போட்டியிடும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க.

போட்டியிடும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களின் 56 பேர் கொண்ட பட்டியலையும் திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 43 பேர் கொண்ட பட்டியலையும் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிடுகிறார்.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். எனவே, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சியின் வேட்பாளர் பட்டியலும் இன்று முழுமையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*

தினமலர்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கான இடங்கள் ஒதுக்கீடு நேற்று முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் கிருஷ்ணசாமியும், சுதர்சனமும் நேற்று கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் காங்கிரசில் ஒரு பிரிவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆறு மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளை தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. பா.ம.க.,வுடன் நேற்று காலை உடன்பாடு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடும் முடிவடைந்து விட்டது. காங்கிரஸ் சார்பில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும், சுதர்சனமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.

வெளியில் வந்த கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவிக்கையில், ""தி.மு.க.,வுடனான உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டோம். காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்ற விவரங்களை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார்,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மற்ற கட்சிகளுடன் தி.மு.க., குழு நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சதவீத இடங்கள் தர தி.மு.க., ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு கிடைக்கும் இடங்களில் 60 சதவீதத்தை தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வாசன் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது நடந்துள்ள ஒப்பந்தத்தில் வாசன் தரப்புக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவாலயத்தில் ஒப்பந்தம் முடிந்ததும் வாசன் தலைமையிலான தலைவர்கள் சென்னையில் உள்ள பாம்குரூவ் ஓட்டலுக்கு விரைந்தனர். அங்கு தங்கியுள்ள காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சாந்தாராம் நாயக்கை சந்தித்து புகார் தெரிவித்தனர். மற்ற கோஷ்டியினரும் மேலிட பார்வையாளரைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். இந்த கோஷ்டிப் பூசல் நேற்று இரவு முழுவதும் நீடித்தது.

இதுதவிர மாவட்ட அளவில் தி.மு.க., குழுவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு பல இடங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் கவுன்சிலர் பதவிகளில் பெரும்பான்மை இடங்களில் தி.மு.க.,வே போட்டியிட விரும்புவதால் அங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி கிளம்பி வருகிறது. இந்த புகார்கள் தங்கள் கட்சிகளின் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் மூலம் தீர்த்து வைக்கும் நிலை நீடித்து வருகிறது.
*

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com