அதிமுகவிலிருந்து ராதிகா நீக்கம்
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அதிமுக கட்சியிலிருந்து ராதிகா சரத்குமாரை நீக்குவதாக ஜெயலலிதாவால் அறிக்கப்பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை - கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், நடிகை ராதிகா சரத்குமார், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், நடிகை ராதிகா சரத்குமார், அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
(தேர்தல் பிரச்சாரம் செய்ய மறுப்பு, சன் டிவியிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களை நீக்க மறுத்தது, ஜெயா டிவியுடன் ஒப்பந்தம் செய்யாத்து ஆகியவையே கட்சி விரோத நடவடிக்கைகள் என கருதப்படுகிறது.)