Saturday, October 07, 2006

தேர்தல் கருத்து கணிப்பு

லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவு
* மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு
* கிராமங்களில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு
* இளைஞர்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு

சென்னை, அக்.7-

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், கிராமங்களில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாகவும், இளைஞர்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இருப்பதாகவும் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

லயோலா கல்லூரி ஊடக ஆய்வியல் புலம் சார்பில மாநில அளவில் ``மாற்று அரசியல் பண்பாடு நோக்கி...'' என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை நேற்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மத்திய தொகுதி

மதுரை மத்திய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அக்டோபர் 1, 2 ஆகிய நாட்களில் அந்தத் தொகுதியில் உள்ள 15 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கு 80 முதல் 90 பேர் வரை என மொத்தம் ஆயிரத்து 260 நபர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது.

மதுரை மத்திய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு 51.2 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 17.6 சதவீதம் பேரும் ஓட்டுப் போடுவோம் என்று கூறினார்கள்.

ஓட்டுப் போடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று 6.2 சதவீதம் பேரும், யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது பற்றி கருத்து சொல்ல முடியாது என்று 2.4 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.

ஓட்டு வங்கி

மே மாதத் தேர்தலின்போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டுகள் பெற்றி ருந்தது. தற்போது 5.4 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.வுக்கு மே மாத தேர்தலில் 12.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. இப்போது 4.8 சதவீத வாக்குகள் அதிகமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. அ.தி.மு.க.வுக்கு மே மாத தேர்தலில் 38.2 வாக்குகள் கிடைத்தன. இப்போது 15.6 சதவீத ஓட்டுகள் குறைவாகக் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

பெண்களை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு 56.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 17.1 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 15.4 பேரும் ஓட்டுப் போட முடிவு செய்திருப்பதாக கூறினார்கள்.

தனியார் துறையில் பணிபுரிவோர் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் தே.மு.தி.க.வுக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

கிராமங்களில் சிக்குன் குனியா நோய் பரவலாக உள்ளது. ``இந்த விஷயத்தில் அரசு இன்னும் சற்று அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்'' என்று பலரும் கூறினார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக, சில கிராமங்களில் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன. புறம்போக்கு நிலத்தில் இதுவரை விவசாயம் செய்து வந்து உள்ளோரிடமிருந்து அந்த நிலம் எடுக்கப்பட்டு வேறு நபர்களுக்கு கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்தோரை ஆங்காங்கே சந்திக்க முடிந்தது.

விலை உயர்வு

எகிறிக் கொண்டு செல்லும் விலைவாசியால் பல கிராமங் களில் மக்கள் மூச்சுத் திணற ஆரம் பித்துள்ளதை உணர முடிகிறது.

எனினும், தி.மு.க. தலைமையிலான அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அனைத்துக் கிராமங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது.

சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்கட்சி ஆகியுள்ள போதிலும் கிராமங்களில் அது இன்னும் வலுவாகவே உள்ளது. சில கிராமங்களில் பிற கட்சிகளை விட அதிக செல்வாக்குடன் விளங்குகிறது.

உள்ளூர் செல்வாக்கு, சாதி, அரசியல் கட்சிகள் என பல காரணிகள் உள்ளாட்சி தேர்தலை தீர்மானிக்கும் நிலை இருப்பதால் அவற்றை ஆய்வு செய்வதற்கான சரியான கருவிகள் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள சுழற்சி முறையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டைப் பரவலாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பொது தொகுதியில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாக மாற்றியிருப்பதை மக்கள் முழுமையாக ஏற்கவில்லை.

இதனால் மக்களிடம் கசப்புணர்வும், காழ்ப்புணர்வும், சில கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பும் வெளிப்படுகிறது.

மேற்கு மாவட்ட கிராமங்களில் பரவலான ஏற்பு உணர்வும், தெற்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பரவலான கசப்புணர்வும் காணப்படுகின்றன.

அச்ச உணர்வு

அரசின் திட்டத்திற்கு உடன்படாவிட்டால் காவல்துறைநட வடிக்கை எடுக்கும் என்ற அச்சம் காரணமாகவும் பல கிராமங்களில் எதிர்ப்பு உணர்வு வெளிப்படையாகத் தெரியவில்லை.

வலிந்து திணித்தல்

கடந்த 10 ஆண்டுகள் பிரச்சினைக்குரியதாக கருதப்படும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய 3 பஞ்சாயத்துகளில், ``அரசு தங்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறது. பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தலை வலிந்து திணிக்கிறது'' என்ற உணர்வு தாழ்த்தப்பட்டோர் அல்லாத மக்களிடம் மேலோங்கியுள்ளது.

நாட்டார் மங்கலத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை சாதியின் முக்கியப் புள்ளிகளுக்கு அரசு அதிகாரிகளும், கட்சியினரும் தந்துள்ள `பொருளாதார உத்திரவாதங்களால்' தற்போது தேர்தல் நடத்துவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு தென்படவில்லை.

இந்த 3 பஞ்சாயத்துகளையும் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரைப் பொறுத்தவரையில், தற்போது கட்சி ரீதியான ஆதரவு இருந்தாலும், பெரும்பான்மை சமூகத்தைப் பகைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்ற அச்ச உணர்வும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினத்தந்தி

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com