Thursday, September 28, 2006

விடுதலைச் சிறுத்தைகள் விலகல்

அ.தி.மு.க. அணியில் இருந்து திடீர் விலகல்:
திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்
கருணாநிதியுடன் சந்திப்பு


சென்னை, செப்.28-

விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் இருந்து விலகினார். நேற்று அவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து, தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்.

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இணைந்து போட்டியிட்டது.

உள்ளாட்சி தேர்தல்

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருந்தது. அந்த கட்சிக்கு 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த ஒதுக்கீடு போதாது என்று, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில், அந்த கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோம் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, 15-க்கும் அதிகமான நகர, ஒன்றிய பகுதிகளில், ஒதுக்கப்பட்டதை விட கூடுதல் இடங்களில் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வாபஸ் பெற மறுப்பு

அந்த இடங்களில் விடுதலைச்சிறுத்தைகளின் வேட்பாளர்களை வாபஸ் பெறும்படி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வற்புறுத்தினார்கள். ஆனால், அதற்கு விடுதலை சிறுத்தைகள் மறுத்துவிட்டனர். இதன்காரணமாக கூட்டணியில் `நெருடல்' ஏற்பட்டது.

இதற்கிடையில், நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், கூட்டணியில் சில சிக்கல்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டார். அதுபற்றி பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும், அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும், பேட்டியின்போது திருமாவளவன் அறிவித்து இருந்தார்.

கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், நேற்று இரவு 7.05 மணிக்கு திருமாவளவன் தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்துக்கு `திடீர்' என்று வந்தார். அங்கு, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை அவர் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். பிறகு அவர்கள் இருவரும் பேச்சு நடத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ரவிக்குமாரும், இந்த சந்திப்பின்போது திருமாவளவனுடன் இருந்தார்.

திருமாவளவன் பேட்டி

ஏறத்தாழ 45 நிமிட நேர சந்திப்புக்குப்பின் வெளியே வந்த திருமாவளவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அவமதிப்பு

"தேர்தல் அரசியல் களம் எது என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. காலத்தின் கட்டளையை ஏற்று இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்தித்தபோதும், உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, கடுமையான அவமதிப்பு ஏற்பட்டது. உழைப்பை பகிர்ந்து கொள்வது போல் வெற்றியையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். அ.தி.மு.க.வினர் உழைப்பை சுரண்டுவதைத்தான் நோக்கமாக கொண்டு இருந்தனர். இதை பேச்சுவார்த்தையின்போது உணர முடிந்தது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வினர் எங்களுக்கு குறைவான இடங்களையே கொடுத்தனர். வெற்றிவாய்ப்பு இல்லாத இடங்களை எங்கள் தலையில் கட்ட முயன்றனர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சந்திக்க முடியவில்லை

எங்களை நட்டாற்றில் விடுவதுபோல் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளினார்கள். ஒன்று, இரண்டு மாவட்டங்களில் இந்த நிலை ஏற்பட்டது. நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த இடங்களில் அவர்களும் (அ.தி.மு.க) மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வந்தன. கூட்டணி கட்சி என்ற முறையில் அ.தி.மு.க. தலைமையை சந்திக்க முடியவில்லை.

நான் சந்திக்க விரும்புவதாக, அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் கூட அவர்கள் தலைமையிடம் தெரிவிக்கவில்லை. அதன்பின் அவர்கள் தொடர்ந்து பேச விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன். விடுதலைச்சிறுத்தைகளின் நோக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சுயமரியாதைக்காகவும் களப்பணி ஆற்றுவதுதான். சகோதரத்துவம், சமத்துவமும்தான் எங்கள் களப்பணி ஆகும்.

தி.மு.க. வெற்றிக்கு...

சுயமரியாதையை இழந்து, அவமரியாதையை தாங்கிக்கொண்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற முடியாது. முதல்-அமைச்சர் கருணாநிதி, எங்களுக்கு உரிய மதிப்பு அளித்து, கூட்டணியில் சேர்த்து இருக்கிறார்.

தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றிக்கு முழுமூச்சுடன் பாடுபடுவோம். கடந்த கால அனுபவங்களை மறந்து, அன்புடன் அரவணைத்து எங்களை வரவேற்ற முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.''

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இடப்பங்கீடு எவ்வளவு?

"தி.மு.க. அணியில் உங்கள் கட்சிக்கு இடப்பங்கீடு எவ்வளவு?'' என்று கேட்டதற்கு, "எங்களை அரவணைத்து உரிய மதிப்பு அளித்து, இடப்பங்கீடும் அளிப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

"முன்பு தி.மு.க. அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாங்கள், அந்த அணியை விட்டு விலகும்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள். இப்போது அ.தி.மு.க. அணியில் வெற்றி பெற்ற உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்வார்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அதுபற்றி நாளை (இன்று) பதில் அளிக்கிறேன், கட்சி அலுவலகத்துக்கு வாருங்கள்''என்று நிருபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தி.மு.க. அணியில்...

கருணாநிதியுடன் நடந்த சந்திப்புக்கு முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அணியில் சேருவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

படம்,செய்தி: தினத்தந்தி

1 comment:

வலைஞன் said...

திருமாவளவனின் அணிமாற்றம் தமிழகமெங்கும் பெரும் ஆச்சரியத்தையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இன்று ஒவ்வொருவரும் பேசிக்கொள்ளும் முக்கிய விஷயமாகவும் விவாதப்பூர்வமாகவும் மாறிவிட்ட விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு அக்கட்சிக்கு சாதகமாக அமையுமா பாதகமாக அமையுமா என்பதே இன்றைய முக்கிய கேள்வி

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com